தமிழர் திரை: ஃபெப்சி Vs படைப்பாளி சங்கம் உருவான கதை!
Author
தங்கம்
Date Published

அது 1997 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள். தமிழ் சினிமா ஸ்டுடியோக்கள் நிறைந்திருந்த சாலிகிராமம். அங்குள்ள அருணாச்சலம் படப்பிடிப்பு அரங்கில் ‘ராமன் அப்துல்லா; படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாலுமகேந்திராவுக்கும் அப்போதைய FEFSI தலைவர் விஜயனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே, தமிழ் சினிமாவில் வரலாறு காணாத பணிமுடக்கத்தைத் துவக்கி வைத்த முதற்பொறி. மறுநாள் பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் முன்னிற்க, அதிகாரப்பூர்வமான பணிமுடக்கம் அறிவிக்கப்பட்டது. 'படைப்பாளிகள் சங்கம்' என்ற பெயரில் புதியதொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
இரண்டு தனிமனிதர்களுக்கு இடையிலான ஈகோ மோதல் புதியதொரு அமைப்பைத் தோற்றுவிக்கும் எனில், அவ்வளவு வலிமை பொதிந்தியனவா அவர்களது ஈகோ? என்று கேட்டுப் பார்த்துக் கொள்வோம். ஒரு புதிய அமைப்பு தோற்றம் கொள்கிறதெனில், புதியதொரு அமைப்பினால் மட்டுமே தீர்வெய்த இயலும் எனுமளவு முரண்கள் நுண்ணேற்றம் பெற்றிருக்கக்கூடும். அல்லது, புதிய முரண்கள் விதை வெடித்துக் கிளம்புகின்றன என்று பொருள். மேலும், பழைய அமைப்பானது முரண்களைக் களைவதில் தோல்வியுற்றிருந்தால் மட்டுமே புதிய அமைப்பின் உதயம் நியாயம் பெறும். அல்லாவிடில் எதற்குப் புதியதொரு அமைப்பு?
ராமன் அப்துல்லா படப்பிடிப்பு வெளியில் உரசிப் பறந்த சிறுபொறியில் நெருப்பெடுத்துக் கொளுத்திய பந்தமே 'தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் சங்கம்' என்ற புதிய அமைப்பு. ராமன் அப்துல்லா படப்பிடிப்பு வெளியில் FEFSI தலைவர் விஜயனின் உதட்டிலிருந்து தெறித்த "Pack up!" என்ற கட்டளைச் சொல்லே அந்தப் பொறி. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இரவோடு இரவாக மூத்த இயக்குநர்கள் குழுமி ஆலோசித்தனர்; மறுநாள் அறிவிப்புச் செய்தனர். படப்பிடிப்பு வெளியில் 'பேக் அப்' என்ற கட்டளைச் சொல்லைப் பிறப்பிக்கிற அதிகாரம் இயக்குநருடையதே என்றும், தொழிற்சங்கத் தலைவருக்கு உரியதல்ல என்றும் அறிவித்தனர். பணிக் களத்தில் படைப்பாளியின் சுதந்திரம் தொழிற்சங்கத் தலைவரால் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், படைப்பாளியின் சுதந்திரம் தொழிற்சங்கத்தால் எண்ணற்ற முறைகளில் ஒடுக்கப்படுகிறது என்றும் குற்றம் சுமத்தினர். எனவே FEFSI என்கிற கூட்டமைப்பிலிருந்து வெளியேறிப் புதிய அமைப்பைத் தோற்றுவிக்கப் போவதாக அறிவித்து, புதிய அமைப்பின் பெயர், 'தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் சங்கம்' என்று பிரகடனப்படுத்தினர்.
திரைப்பட உருவாக்கத்தில் கற்பனையை, படைப்புத் திறனை ஆற்றல் மூலமெனக் கொண்டவர்கள், உடலுழைப்பு செலுத்துகிற தொழிலாளர்களின் அமைப்புக்குள் பொருந்தவில்லை என்றனர். படைப்பாளியிடம் தங்கியிருக்கிற உற்பத்தி ஆற்றலுக்கும், தொழிலாளரிடம் தங்கியிருக்கிற உற்பத்தி ஆற்றலுக்கும் இடையே காணக்கிடக்கிற வேறுபாடு முதன்மைக் கருதுகோளாக முன்வைக்கப்பட்டது. அவ்வகையில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடன இயக்குநர், கலை இயக்குநர், சண்டைப் பயிற்சி இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்டோர் படைப்பாளிகள் என்ற வரையறைக்குள் வருவதாக அறிவித்தனர். மேற்படிப் படைப்பாளிகள் FEFSI என்கிற கூட்டமைப்பிலிருந்து விடுபட்டுப் புதிய அமைப்பான படைப்பாளிகள் சங்கத்துள் பொருந்திக் கொண்டால் மட்டுமே சுதந்திரமாக இயங்க முடியும் என்று நம்பிக்கை தந்தனர். தமிழ்ப் படப்பிடிப்பு எங்கும் நிறுத்தப்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே நேர்த்தியான இணக்க உரையாடல் எதுவும் நிகழவில்லை. பின்னர் படைப்பாளிகள் சங்கத்தில் தொழிலாளர் அணிகளும் பிறப்பெடுத்தன என்பதும், நம்பி வந்திருந்த தொழிலாளர் அணிகளைப் பின்னொரு திருநாளில் சீர்வரிசையுடன் FEFSI க்குத் தாரை வார்த்துவிட்டு, வேனிற்காலக் கொப்புளம் போல வற்றிப் போய் தமிழரின் சினிமா வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறு வடுவாக அடையாளம் பெற்றிருக்கிறது ‘படைப்பாளிகள் சங்கம்’ என்பதுவும் சுருக்கமான சரித்திர விபரம்.
24 தொழில் அணிகளை உள்ளடக்கியிருந்த FEFSI யிலிருந்து தனியாக வெளியேறியது இயக்குநர்கள் அணி. படைப்பாளிகள் என்ற வரையறையுள் பொருந்துகிற இதர கலைப் பிரிவுகளின் தொழில் அணிகள் இன்னும் FEFSI க்குள் தான் இருக்கின்றன. அவ்வணிகளைத் தம்வசம் இழுப்பதற்காக, 'படைப்புச் சுதந்திரம்' என்ற முழக்கம் படைக்கப்பட்டது.
24 தொழில் அணிகளை உள்ளடக்கியிருந்த FEFSI யிலிருந்து தனியாக வெளியேறியது இயக்குநர்கள் அணி. படைப்பாளிகள் என்ற வரையறையுள் பொருந்துகிற இதர கலைப் பிரிவுகளின் தொழில் அணிகள் இன்னும் FEFSI க்குள் தான் இருக்கின்றன. அவ்வணிகளைத் தம்வசம் இழுப்பதற்காக, 'படைப்புச் சுதந்திரம்' என்ற முழக்கம் படைக்கப்பட்டது.
ஒருவழியாக, பிற கலைஞர்களை உள்ளடக்கிய தொழில் அணிகளும் படைப்பாளிகள் சங்கத்தில் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் இவர்களது அமைப்பு ஒரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியாது. படைப்பாளிகளின் மூளை உழைப்பு மட்டும் போதுமா? லைட்மேன், எலக்ட்ரீஷியன், காமிரா உதவியாளர்கள், தயாரிப்பு உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட உழைப்பாளிகள் இன்றி அது முடியாது. உழைப்பாளிகளின் அணிகள் இன்னும் FEFSI-யிலேயே தங்கியிருந்தன.
லைட்மேன் இல்லாமல் ஒரு திரைப்படத்தைப் படைப்பாளிகள் உருவாக்கிவிட முடியுமா? அல்லது ஒரு லைட்மேனைப் படைப்பாளிகள் உருவாக்கிவிட முடியுமா? அதுவும் முடியாது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் பஞ்சாலைத் தொழில்துறை எழுச்சி பெற்ற துவக்க காலத்தில் சாலையில் போவோரை அழைத்து, ஸ்பின்னிங் மெஷினில் இழை கட்டுவது எப்படி என்று கற்றுக் கொடுத்து புதிய பஞ்சாலைத் தொழிலாளரை உருவாக்கியது போன்ற எளிய பயிற்சி முறைகளால் ஒரு லைட்மேனை உருவாக்கிவிட முடியாது.
ஒரு லைட்மேனை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவைகள் இரண்டு. முதலாவது, திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கும் தருணத்தில் மட்டுமே பயிற்சியளிக்க முடியும். இரண்டாவது, லைட்மேனால் மட்டுமே ஒரு லைட்மேனை உருவாக்க முடியும். லைட்மேன் இல்லாவிடில் சினிமா இல்லை.
தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் சங்கம் என்ற பெயரைத் திருத்தம் செய்து கொண்டு அடுத்த நகர்வைத் துவக்கினர். 'தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் தொழிலாளிகள் சங்க'மாக அறிவித்துக் கொண்டனர்.
FEFSI-க்கு எதிராக சங்கம் கட்டுகிறார்கள் என்று FEFSI கொந்தளித்தபோது, அவ்வகையாக சங்கம் கட்டுவதில் குற்றமேதும் இல்லை என்பதற்கான வரலாற்று விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. 1956 ஆம் ஆண்டின் மொழிவாரி மாநிலப் பிரிப்புக்குப் பின்னர் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும், கேரளத்திலும் திரைப்பட உருவாக்கத்திற்கான கட்டமைப்புகள் எழும்பியது போலவே திரைப்படத் தொழிற்சங்கங்களும் உதயமாகிவிட்டன என்பதாலும், அந்தந்த மாநிலத் தொழிற்சங்கங்கள் அந்தந்த மாநில திரைத்துறையின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்பதாலும், “FEFSI-யில் மிஞ்சியிருப்பது தென்னிந்தியக் கூட்டமைப்பு அல்ல; தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் அமைப்பு” என்றும் விளக்கங்கள் தரப்பட்டன.
படைப்புச் சுதந்திரம் என்ற முழக்கத்திற்குப் பக்கத் துணையாகத் தமிழ்த் தேசியவாதம் முழக்கப்பட்டது. எவ்விதத் தேசியவாத அக்கறைகளோ, கோட்பாட்டு அறங்களோ இன்றி ஒரு சமூகத்தின் தேசியவாதம் கிளர்த்தப்பட்டது. தேசியவாத அரசியல் கோட்பாட்டின் துணையோடு மட்டுமே நீதிப் பிறழ்வை நேர்ப்படுத்த இயலும் என்ற நெருக்கடியில் இருப்பு கொண்டிருக்கிற சமூகமொன்றில், தேசியவாதக் கோட்பாட்டு அறங்களின் தூயவொளி வீசுகிற பயணப் பாதையில் வெகுமக்கள் தலைமை அற்றுப் போயிற்றெனில், முதலாளித்துவம் எவ்வளவு இழிவாக தேசியவாதத்தைச் சீரழிக்க முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்துப் படைத்தது படைப்பாளிகள் சங்கம்.

'தமிழ்' என்கிற கவர்ச்சிகரமான உணர்ச்சி முழக்கம் அல்லது உணர்ச்சிகரமான கவர்ச்சி முழக்கம் படைப்பாளிகள் சங்கத்துக்குத் துவக்க வெற்றிகளை ஈட்டித் தந்தது. தமிழுக்கு எதிரான ஊடகங்கள்கூட படைப்பாளிகளை ஆதரித்தாக வேண்டிய அழுத்தத்திற்கு அடிபணிந்தன. ‘படைப்பாளிகளை எதிர்ப்பது தமிழை எதிர்ப்பதாகப் புரிந்து கொள்ளப்படுமெனில் வெகுமக்களிடமிருந்து அந்நியமாக நேரிடும்’ என்ற வணிக சூத்திரத்தின்படி தமிழ் ஆதரவு நிலையையே ஊடகங்கள் தேர்ந்தெடுத்தன. அரசின் ஆதரவும் ஆசியும் கிட்டின. தமிழால் உதயமாகிய கட்சியான தி.மு.க. அரசுக் கட்டிலை அலங்கரித்திருந்த காலம். ஊடகங்களும், அரசும் அங்கீகரித்து வாழ்த்துரைத்த பின்னர் வெகுமக்கள் கருத்தும் தமிழுக்கு ஆதரவாகத் திரண்டது. வெற்றிக் களிப்பில் மிதந்தனர் படைப்பாளிகள்.
அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்தை விடுவித்த புரட்சிப் படை வீரர்களையொத்த பெருமிதத்துடன் தேனாம்பேட்டை ஆண்டாள் திரையரங்கில் (மனோரமா ஆச்சிக்கு சொந்தமான Preview Theater) பரபரப்பாகச் சுழன்றனர். இதே ஆண்டாள் திரையரங்கின் கழிவறைக்குள் ஒளித்து வைத்து கதவைப் பூட்டித்தான் பாலசந்தரை FEFSI-யின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாகவும், அரசோடு மக்களும் ஆதரவளிக்கிற நிலையில் இன்று தாங்கள் FEFSI-யை வென்று விட்டதாகவும் களித்தனர். ஆனாலும் படப்பிடிப்பு எதுவும் நிகழவில்லை. மூளை உழைப்பாளிகளுக்கு, படைப்புற்பத்திக்கான உடல் உழைப்பை நல்க மறுத்தது தொழிலாள வர்க்கம். வெளியிலிருந்து ஆட்கள் எடுக்கப்படுவர் என்ற அஸ்திரம் படைப்பாளிகளின் தாக்கு அரண்களிலிருந்து எய்யப்பட்டன. மும்பையில் மணிரத்னத்தின் படைப்புருவாக்கத்திற்கு ஒத்துழைக்க மறுத்தனர் தொழிலாளர். தென்னிந்திய அமைப்பை, கூடுதல் அதிகாரம் கொண்ட அகில இந்திய அமைப்பு ஆதரவு தந்து வலிமைப்படுத்தியது. தமிழ்ப் படைப்பாளிகள் அகில இந்திய அளவில் ஒரு சிறுகூட்டமாக பலவீனப்படுத்தப்பட்டனர்.
படைப்பாளிகளை ஆதரித்த விஜயகாந்தின் Out door unit வண்டி FEFSI யால் வழிமறித்துத் தாக்கப்பட்டது. படைப்பாளிகளின் ஸ்டண்ட் யூனியனை பலப்படுத்துவதற்குத் துணை புரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. "FEFSI யில் நம்ம ஆளுக அதிகாரத்துல இல்ல; பூரா மலையாளத்துக் காரனும் தெலுங்கனுந்தா" என்று குமுறினர் படைப்பாளிகளின் ஆதரவாளர்கள்.
தமிழ்த் தேசிய அமைப்பினர், தமிழ்த் தேசத்தை உருவாக்குவதற்கு முந்தைய நகர்வுகளில் ஒன்றாக இதைக் கணித்தனர். அப்போதைய 'இனி' மாத இதழில் (எஸ்.வி. ராஜதுரையின் 'இனி' அல்ல; விடுதலைக் குயில்களின் 'இனி') சுப. வீரபாண்டியன், தமிழ்த் தேசியத் தன்னாட்சித் தீர்வு என்ற அடிப்படையில் படைப்பாளிகளை ஆதரித்தார்.
மார்க்ஸிய லெனினியவாதிகளும், சனாதனக் கம்யூனிஸ்ட்களும் FEFSI-யை ஆதரித்தனர். ஜூலை நடுவில், கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலையருகே, மா.லெ குழுக்களின் FEFSI-க்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் படைப்பாளிகள் விளாசப்பட்டனர். "என்னத்தப் பெருசாப் படமெடுக்கறார் இந்த பாரதிராஜா ... எங்க லைட்மேன்கிட்ட கேமராவக் குடுத்துப் பாரு ... அவர் எடுப்பாரு இந்த பாரதிராஜாவ விட நல்ல படம்" என்று முழங்கி, தொழிலாளர் வர்க்கத்தை மகிமைப்படுத்தினர்.
ஜூலை மாதம் 30 ஆம் தேதி சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் காமராஜர் சிலையருகே FEFSI-க்கு ஆதரவான பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது மார்க்ஸியப் பொதுவுடைக் கட்சி (C.P.I - M). பாலசந்தர், பாரதிராஜா, வி.சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் - அதாவது முதலாளிகள் - உச்சபதவி வகிக்கிற, அவர்களால் நிறுவப்பட்ட, அவர்களால் தலைமை ஏற்கப்படுகிற தொழிற்சங்கம் எப்படித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும்? என்று வினவினர். (ஓராண்டு கழிந்த பின்னர் தொழிலாளர் அமைப்பான FEFSI-க்கு, முதலாளிகளுள் ஒருவரான பாலசந்தர் தலைமையேற்க, "படைப்பாளிகள் தொழிலாளர்' சங்கம் FEFSI-க்குள் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டது. வடபழனி இசையமைப்பாளர் சங்கக் கட்டிடத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது இந்த ஐக்கிய வைபவம்). வர்க்க உணர்வின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் அமைப்பான FEFSI-யை ஆதரிப்பதாகப் பிரகடனப்படுத்தினர் தீவிர இடதுசாரிகளும், சனாதன இடதுசாரிகளும்.
பாக்யராஜின் FEFSI ஆதரவு நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட அரைப் பக்க அளவில் தினத்தந்தி வெளியிட்டிருந்தது. (அப்போதைய பாக்யராஜ் தி.மு.க.விற்காகத் தேர்தல் வண்டிப் பரபரப்புரையெதுவும் செய்திருக்கவில்லை). 'துரோகம்' என்று குமுறினார் பாரதிராஜா. குரு சிஷ்ய சென்ட்டிமென்ட் எல்லாம் பிஞ்சு பிஞ்சு பஞ்சாய்ப் பறந்தது.
கமல்ஹாசன் 'படைப்பாளிகளை ஆதரிக்க முடியாது' என்று மதர்ப்புடன் நின்றார். குருநாதர் பாலசந்தரின் இச்சையைப் புறக்கணித்த கமல்ஹாசன் தனது FEFSI-ஆதரவு நிலையை, தொழிலாளி வர்க்க ஆதரவு நிலை என்று காட்டி ஒரு கடிதமாக வரைந்து அனுப்பியிருந்தார்.
ஆண்டாள் திரையரங்கில் நடைபெற்ற படைப்பாளிகள் கூட்டமொன்றில் முன்வரிசைக்காரர் தனது கைபேசியை உயிர்ப்புடன் சட்டைப் பையில் வைத்திருந்து நடப்புகளை கமல்ஹாசனுக்கு Live telecast பண்ணுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. FEFSI-யின் ஆட்கள் படைப்பாளிகள் சங்கத்தில் ஊடுருவி உளவு சேகரிப்பதாகப் படைப்பாளிகள் சினந்தனர். FEFSI யும் இதே குற்றச்சாற்றைப் படைப்பாளிகள் மீது ஏவிச் சினந்தது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பதற்காகக் கோட்டை சென்றது படைப்பாளிகள் குழு. நல்ல செய்தியுடன் திரும்பி வரப்போகிற படைப்பாளிகள் குழுவை நேர்கொள்வதற்கான இச்சையுடன் பெருந்திரளானவர்கள் (பெரும்பாலும் இயக்குநர்களின் உதவியாளர்கள்) ஆண்டாள் திரையரங்கின் வாயிலில் காத்திருக்க... கைபேசி வைத்திருந்த சிலருக்குக் கிடைத்த செய்தியின் காரணமாக, பீறிடும் ஆவலானது பீறிடும் சினமாகச் சடுதியில் மாறியது. முதல்வரின் செய்தியை ஏந்தியவாறு 'தென்னிந்திய' நடிகர் சங்கத்துக்குச் சென்று விட்டதாம் 'தமிழ்' படைப்பாளிகள் குழு. பைக்குகளும், ஆட்டோக்களும் ஆண்டாள் திரையரங்கிலிருந்து கிளம்பி சர்சர்ரென்று அண்ணாசாலையின் பரபரப்புக்குள் நெளிந்து நடிகர் சங்கம் நோக்கிப் பறந்தன.
படைப்பாளிகள் சங்கத்துக்குப் பூரண ஆதரவையும், ஆசியையும் முதல்வர் வழங்கியுள்ளார் என்று நடிகர் சங்கத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த், ராதாரவி ஆகியோர் படைப்பாளிகளுக்கு ஆதரவு நல்குவதாக மைக்கில் அறிவித்தனர். கழிப்பறை அருகே சந்தேகத்திற்கு உரியவராக அடையாளம் காணப்பட்ட ஒருவரை விசாரித்தபோது, துணை நடிகர் என்ற தகவல் கிடைத்தது. மேல் விசாரணையில் FEFSI யின் உளவாளி என்று அவரை அடையாளப்படுத்தி வெளியேற்றினர்.
ஆண்டாள் திரையரங்கு வாசலை எட்டிய புதிய செய்தியொன்று, தளர்ந்திருந்த கூட்டத்தின் நாடித் துடிப்பை வேகப்படுத்தியது. முதல்வரைச் சந்தித்த குழுவினர் நடிகர் சங்கத்திலிருந்து கிளம்பி ஆண்டாள் திரையரங்கு நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் செய்தி எட்டியிருந்தது. மீண்டும் உயிர்கொண்டு துள்ளியது ஆண்டாள் திரையரங்கின் முன்வெளி.
ஆண்டாள் திரையரங்கில் உரையாற்றிய ராதாரவி “அவன் அடிச்சான்னா... அடிக்கு அடிதா” என்றதும், கலைஞர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். கூட்டம் தாமதமாக முடிவுற்றதால், வெளியேறியவர்கள் உணவு விடுதி நோக்கிப் பறந்தார்கள். தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஆனந்தாஸிலும், பாண்டிபஜார் டீலக்ஸிலும், ஆழ்வார்பேட்டை கமல்ஹாசன் அலுவலகம் அருகே இருக்கிற சாம்கோவிலும், கோடம்பாக்கம் ஹாலிவுட்டிலும் திடீரெனப் புகுந்த புதிய பசியாளிகள் உணவருந்தியபடியே கதைகதையாகப் பரிமாறிக் கொண்டார்கள். முதல்வர் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். FEFSI அவ்வளவுதானாம். தெலுங்கருக்கும், கன்னடியருக்கும், மலையாளியருக்கும் போலவே தமிழரின் சினிமாவுக்கும் ஒரு அமைப்பு கிட்டிவிட்டதாம்.
ஆனாலும் ‘படைப்பாளிகளின் படங்கள் திரை வெளியீடு பெறும் திரையரங்குகளில் FEFSI பிரச்சினை பண்ணும்’ என்று யூகங்கள் எழுந்தன. அத்தகைய தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சாதிச் சங்கங்களின் உதவி கொண்டு FEFSI யின் எதிர்ப்பைத் தத்தமது ஊர்களில் முறியடித்து, படைப்பாளிகளின் படங்களை ஓடப் பண்ணுவதாகக்கூட சிலர் யுக்தி வகுத்தனர். “சாதிச் சங்கச் சார்பு அறிவீனமானது, மனிதகுல விரோத அணுகுமுறை” என்று கருத்துரைத்தவர், நடைமுறைத் தந்திரங்களைப் புரிந்து கொள்வதற்கான நுண்மையற்றவர் என்ற தரச்சான்று குத்தப்பட்டார். “ராதாரவியின் கருத்தும் ஏற்புடையதல்ல. வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல; படைப்பாளி என்ற பதத்துக்குத் தகுதி சேர்க்கும் வகையில் கலைஞனுக்குரிய மன அமைப்புடன் சிக்கலை எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய முரட்டுத்தனமாக அல்ல” என்று மறுபடியும் கருத்துரைத்த பொழுது பரிகசிக்கப்பட்டார். பாரதிராஜா அலுவலகம், பாலுமகேந்திரா அலுவலகம், ஆண்டாள் திரையரங்கம் என்று புதிய புதிய கூட்டுவெளிகளில் எந்நேரமும் ஸ்ட்ரைக் பற்றிய பேச்சாகவே இருந்தது.
FEFSI தரப்பிலும் இதே வகையான பரபரப்பு நீடித்தது. FEFSI-யின் கட்டுக் குலையாத 24 கிராஃப்ட்களும் பொலபொலத்துப் போயிற்றெனத் துயருற்றனர் FEFSI ஆட்கள். படைப்பாளிகள் என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு முதலாளிகள் உருவாக்கிய சங்கத்துக்குப் போய்விடமாட்டார்கள் தொழிலாளர்கள் என்று வைத்திருந்த நம்பிக்கையை நொறுக்கிவிட்டது தொழிலாளர் வர்க்கம். ஊடக ஆதரவு, அரசின் ஆதரவு, மக்களின் ஆதரவு ஆகியனவற்றின் வலிமை கொண்டு தமிழ் நிலத்தில் படைப்பாளிகள் நின்றாலும், அகில இந்திய வெளியில் படைப்பாளிகளை பலவீனப்படுத்த முடியும் என்று நம்பியிருந்தது FEFSI. திரைப்படப் பண்ட உற்பத்திக்கான உடலுழைப்புப் பயிற்சி பெற்ற திறனாளிகள் தங்கள் வசம் மட்டுமே இருந்ததால் ஏற்பட்டிருந்த நம்பிக்கை அது. உண்மையே. அத்தகு திறனாளிகள் திரைப்பட உற்பத்திக் களத்தில் மட்டுமே பயிற்சி பெற்று தேர்ச்சி கொண்டவர்கள். FEFSI-க்குள் தவிர வேறெங்கும் அவர்கள் இல்லை. FEFSI-யிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேறிவிட மாட்டார்கள். ஏனெனில் படைப்பாளிகள் சங்கம் என்பது முதலாளிகளால் உருவாக்கப்பட்டது. முதலாளிகளால் நிர்வகிக்கப்படுவது. முதலாளிகளுடையது. முதலாளிகள் தொழிலாளரின் பகையாளிகள். எனவே பகையாளியின் நிழலடியை அண்டமாட்டார் தொழிலாளர் ...
ஆனாலும் தொழிலாளர் வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர்; வெளியே இழுக்கப்பட்டனர். FEFSI என்பது தனது பெயரில் 'தென்னிந்திய' அடையாளம் கொண்டிருப்பினும் தமிழ் சினிமா தவிர வேறெங்கும் அதற்குக் கிளைகள் இல்லை. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் அந்தந்த தேசிய சினிமா அடையாளங்களைப் பொறித்த பதாகையுடன்தான் வலம் வருகின்றனர் திரைப்படத் தொழிலாளர்; அவர்களது தொழில் தேவைகளை அந்தந்த தேசிய சினிமாத் தொழிற்சங்கங்கள் நிறைவேற்றி விடுகின்றன; ஒருபோதும் அவர்கள் FEFSI-யை அண்டுவதில்லை.
FEFSI என்பது ஒரு பழைய கூடு. குடியிருந்த நான்கு பறவைகளில் மூன்றும் வெளிப் பறந்து தத்தம் கூடுகளைத் தத்தம் மரங்களில் கட்டிக் குடியிருந்து வருகின்றன. புதிய கூட்டில் குஞ்சு பொரித்த பின்னர் புதிய பறவைகளின் நினைவுகளில்கூட, பழைய கூடு அறவே இல்லை. சொந்தக் கூட்டுக்குத் திரும்ப மறந்து சொந்த நலனுக்காகத் தமிழ்க் கூட்டிலேயே தங்கிவிட்ட பறவைகள், தாங்கள் குடியிருப்பது தமிழ்க் கூட்டில் என்ற மெய்நிலையை மறுத்து "தென்னிந்தியக் கூடு தென்னிந்தியக் கூடு தென்னிந்தியக்கூடு" என்று ஓயாமல் பிலாக்கணம் பாடிக்கொண்டிருந்தன. பாவம்... மலரும் நினைவுகள்! தமிழ்க் குரல் எழுப்புகிற தமிழ்ப் பறவைகளின் குரல்வளையைக் கொத்திக் கிழித்தன. FEFSI என்ற கூட்டுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிற 'இரை' உரிமை போதுமா? தமிழ்க் குரல் எழுப்புவதற்கான 'இறை' உரிமை வேண்டுமா? என்று தத்தமக்குள் வினவிக் கொண்டன தமிழ்ப் பறவைகள். தங்கள் கூட்டிலேயே அந்நியமான தமிழ்ப் பறவைகள் 'தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் தொழிலாளர் சங்கம்' என்ற புதிய கூட்டுக்குக் குடிபறந்தன. FEFSI-யை அல்ல, படைப்பாளிகள் சங்கத்தையே தமது கூடெனக் கருதின. புதிய கூடும் தமிழ்க் கூடு அல்ல என்பதைப் பிற்கால வரலாறு எழுதிச் சென்றது.
1997 ஆகஸ்ட் 10-ஆம் நாள், பனகல் பூங்காவை வெங்கட்நாராயணா சாலை சந்திக்கிற முனையில் அமைந்திருக்கிற வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்திருந்தது FEFSI-யோ, படைப்பாளிகளோ அல்ல. உரையாற்றுபவர்களும், உரையைக் கேட்க வருபவர்களும் யார் யார்? என்பது குறித்த கவனத்துடன் தேர்வு முறை தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அன்றைய அமர்வுகளின் மூலநாயகனாக வீற்றிருந்தவர் - படத்தொகுப்பாளர், இயக்குநர், மாற்று சினிமாக்காரர் என்று விரிந்த அடையாளங்களுடன் இயங்கி வந்த பி.லெனின். உரையாற்ற வந்தவர்களில் திரைத் துறை ஜாம்பவான்கள் எவருமில்லை; திரைத் துறையைச் சாராதவர்கள். பார்வையாளர் தொகுதியிலும், திரைத் துறையைச் சாராத பிறர் ஒரு குழுவாகத் தனித்து இருப்பு கொண்டிருந்தனர்.
நாடகக்காரர் பிரளயன், மொழிபெயர்ப்பாளர் அமரர் திரு. தி.சு. சதாசிவம், ஜனா (இன்றைய இயக்குநர் ஜனநாதன்) உள்ளிட்ட பலரும் மேடையேறினர். படைப்பாளிகளும், FEFSI-யும் தங்கள் பகையை மறந்து சமாதான மனப்பாங்குடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. படைப்பாளிகளையோ, FEFSI-யையோ சினமூட்டும் வகையிலான வலுத்த குரல்கள் ஏதுமில்லை. அனைவருமே அமுக்கமாகப் பேசினர். பூரணமான FEFSI ஆதரவு நிலை என்பது கமுக்கமாக இருந்தது; தமிழ் எதிர்ப்பு என்பதும் கமுக்கமாகவே இருந்தது. நெருப்புக் கங்கை மூடி மறைப்பதற்குப் பட்டுத் துணி சார்த்தியிருந்தனர்.
மதியம் துவங்கிய கூட்டம் மாலையில் முடிந்தது. 'கூட்டம் முடிந்ததும் காத்திருக்கவும், சிறப்பு விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது' என்ற கமுக்கத் தகவல் பெற்றுக் கொண்டவர் தவிர அனைவரும் வெளியேறினர். கிட்டத்தட்ட இருபது பேர் வடிகட்டப்பட்டனர். இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோரையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கூட்டத்தை ஒழுங்கமைத்தவர் யதார்த்தா தாஸ். திரைப்படத் திறனாய்வுக்கான ‘யதார்த்தா’ கையெழுத்து இதழைத் துவக்கியவர்.
1994 ஜனவரி முதல் நாள், பாலச்சந்தரின் கவிதாலயா அலுவலகம் அருகே அமைந்திருக்கும் திருமண மண்டபத்தில் லெனின் தலைமையேற்க, யதார்த்தாவின் அறிமுகக்கூட்டம் நடந்திருந்தது. மேலும், பிலிம் சேம்பர் திரையரங்கில் பாலுமகேந்திராவின் 'கோகிலா'வை முதல் திரையீடாகக் கொண்டு சில காலம் இயங்கி வந்த யதார்த்தா திரைப்படச் சங்கத்தை நிறுவிய மூலவர்களுள் ஒருவர். அறிவொளி இயக்கத்தில் களப் பணி அனுபவமும் பெற்றவர். இவ்வகையாகப் பொதுவெளிகளில் பரவலாக அறியப்பட்டிருந்த தாஸ், அன்றைய மாலை நேரத்துச் சிறப்பு விவாதத்தை ஒழுங்கமைத்தார். கண்ணம்மா பேட்டைக் குழு என்று அறியப்பட்டிருந்த கலைஞர்கள் குழுவிலிருந்து இளங்கோ, காந்தி, ராம் (சரசுராம்), எல்டாம்ஸ் ரவி என்று அறியப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் ரவி உள்ளிட்ட பலரும் சிறப்பு விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ஆரோக்கியமான தமிழ் சினிமாவை இலட்சியமாகக் கொண்ட குழு.
லெனின் துவக்கி வைத்தார். “படைப்பாளிகள், FEFSI ஆகிய இரண்டு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அமர வைப்பதே இன்றைய அமர்வின் மூலநோக்கம்” என்று அறிவித்துக் கொண்டார். பேசினால் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார். சினிமாத் தொழிலாளர் தங்கள் இனம், மொழி ஆகியவற்றை மறந்து அன்யோன்யமாக வேலை செய்த காலம் இனி வராதோ? என்று துயருற்றார். 'தமிழர்' என்று சொல்லித் தொழிலாளரிடையே பகை மூட்ட வேண்டுமா? என்று வினவினார். தமிழுக்கென்று ஒரு சங்கம் என்று எண்ணியவர்கள் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டனர். படைப்பாளிகளையும், FEFSI-யையும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை ஆகஸ்டு 15 ஆம் நாள் துவக்கலாம் என்று கூறினார்.
திட்டம் இதுதான்: அமைதிக் குழுவினர் ஆகஸ்டு 15 அன்று காலையில் மெரினா கடற்கரையில் குழும வேண்டும். ‘இரண்டு தரப்பினரும் அமைதியை உருவாக்குங்கள்’ என்பதன் குறியீடாக இருபத்தி நான்கு புறாக்களைப் பறக்கவிட வேண்டும். இப்போதைக்கு இந்த நடவடிக்கை. வேறென்ன செய்யலாம் என்பதைப் போகப் போக முடிவு செய்துகொள்ளலாம்.
‘ஒருவர்’ கேட்டார் லெனினைப் பார்த்து: "அமைதிக்கான விருப்பமும், அமைதிக்கான முன்முயற்சிகளும் வரவேற்கத்தக்கன. ஆனால் இருபத்தி நான்கு புறாக்கள் எதைக் குறிக்கின்றன ஸார்?"
"புறாக்கள் சமாதானத்தைக் குறிப்பன" என்று விளக்கினார் லெனின்.
"இருபத்தி நான்கு என்ற எண் FEFSI யைக் குறிக்கிறது" என்று வந்தது மறுவினை. 24 என்கிற எண், 24 என்கிற குறியீடு ஆய்வுப் பொருளாயிற்று. "புறாக்களைப் பறக்க விடுங்கள்; நூறோ ஆயிரமோ பறக்க விடுங்கள்; இருபத்தி நான்கு என்கிற எண்ணிக்கைத் தேர்வு ஒரு சார்பானது; FEFSI சார்பானது. அமைதிக் குழு நடுநிலை பிறழ்கிறது" என்றார் ‘ஒருவர்’. தொடர்ந்த உரையாடலின் இறுதியில், புறாக்களைப் பறக்கவிடும் திட்டம் ஒருவழியாகக் கைவிடப்பட்டது. இரவு பத்து மணி வரை கலந்தாய்வு தொடர்ந்தது.
ஊதிய விகித ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த ஒப்பந்தத்திற்கான காலத்தில் ஸ்ட்ரைக் வந்துவிட்டது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். தொழிலாளர் தங்கள் இன, மொழிப் பாகுபாடுகளைத் துறந்து பழையபடி ஓரிடத்தில் வேலை செய்ய வேண்டும் ...
இங்கு 'பழையபடி' என்கிற சொல்லானது, தமிழர் தமது தேசிய சினிமாவுக்கென்று அமைப்பைக் கட்டியெழுப்பும் ஆசையைக் கைவிட்டு - 'பழையபடி..!'. விடையைத் தீர்மானித்துவிட்டுக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் லெனின்.
அனைவருமே லெனின் கருத்துகளை ஏற்றுவிட்டிருந்த நிலையில் ‘ஒருவர்’ மட்டும் மறுத்தார்
“தமிழர் தமது தேசிய சினிமாவுக்கென்று கட்டியெழுப்புகிற அமைப்பானது, தமிழரின் சினிமாவில் இன்று பணியாற்றி வருகிற தொழிலாளர் அனைவரையும் மொழி, இனக் குறிகளின்றி ஏற்றுக்கொள்கிறது. எந்த மொழி பேசுகிற இனத்தவராக இருப்பினும் இந்தச் சங்கத்தில் பணியாற்றலாம். மொழிவாரி மாநிலமாகத் தமிழ் நிலம் பிரிக்கப்பட்ட பின்னரும் பிற தேசிய இனத்தவர் தமிழருக்கு இணையான உரிமையுடன் தமிழ் நிலத்தில் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்; அதைப் போலத்தான் இதுவும். ஒருவகையிலும் 'இனப் பகை' நடவடிக்கையல்ல. தெலுங்கருக்கும், கன்னடியருக்கும், மலையாளிகளுக்கும் சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்காதவர்கள் தமிழருக்கு மட்டும் மறுப்பது ஏன்? மேலும், தமிழரின் சினிமாவுக்கான அமைப்பு என்பது காலத்தின் தேவை. உலகமயமானது, மக்கள் சமூகங்களின் சரித்திரார்த்த நில எல்லைகளை அழித்து உலகை ஒருசந்தை ஆக்குகிற தந்திரோயாயத்துடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் தேசிய சினிமா எல்லைகள் தன்னியல்பில் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழரின் சினிமா, 'தேசிய சினிமா' என்ற அடையாளத்தை ரகஸியமாகத் துறந்து கொண்டிருக்கிறது. இந்த அடையாளம் முற்றாகத் துறக்கப்படும் எனில் அடுத்தகட்டமாக ஹாலிவுட்டின் நேரடி ஆளுகைக்கு ஆட்படப்போகிறது. இன்றைய (1997) நிலையில் ஒரே ஒரு ஹாலிவுட் படம் Jurrasic park மட்டுமே தமிழில் டப்பாகி வந்திருக்கிறது. அடுத்தடுத்து ஹாலிவுட் படங்கள் தமிழுக்கு டப்பாகி வரப்போகின்றன. Jurrasic park-கின் இரண்டாம் பாகம் (Lost world) அநேகமாக டப்பாகலாம். சில ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டில் ரிலீஸாகும் படங்களில் நாற்பது விழுக்காடு ஹாலிவுட் படங்களாக உயரக்கூடும். தமிழ்த் தயாரிப்பாளர், கலைஞர், தொழில்நுட்பக் கலைஞர், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் தொழில் உரிமைகளையும் தகர்த்தெறியப் போகிறது ஹாலிவுட். தமிழரின் சினிமா மட்டுமல்ல, துணைக் கண்டத்தின் தேசிய சினிமாக்கள் அனைத்துமே மரணிக்கப் போகின்றன.
பன்னாட்டு முதலீட்டியம் தமிழரின் சினிமாவை அடிமைப்படுத்தும். பன்னாட்டு முதலீட்டியத்தை ஆலிங்கனம் பண்ணிக்கொள்கிற பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இங்கே வம்ச விருத்தி உண்டு. சிறு முதலாளிகள் மலடாக்கப்படுவர்; மரணிப்பர். பன்மொழிச் சந்தைக்கான திரைப்படங்கள் (Bi lingual films, Multi lingual films, Dupping films) பெருகும். தேசிய அடையாளம் முற்றாகத் துடைத்தழிக்கப்படும். விரிந்த சந்தையின் அபரிமிதமான உபரி மீதான பெருமுதலாளிகளின் பேராசை பிரம்மாண்டங்களை மேலெழுப்பும். வரலாற்றுக் கதைகளையும், புராணக் கதைகளையும், மாயமந்திரக் கதைகளையும் தயாரிப்பது ஒரு போக்காக நிலைபெறும். ரஜினிகாந்த் நடிக்காமலேயே ரஜினிகாந்தின் திரைப்படம் மின்னணுத் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படும். தமிழரின் சினிமா சாவுறும்.
தமிழரின் சினிமா மட்டுமல்ல, துணைக் கண்டத்தின் தேசிய சினிமாக்கள் அனைத்துமே மரணிக்கப் போகின்றன. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தப் போக்கு அதன் உச்சத்தை எட்டியிருக்கும். பின்னர் பன்னாட்டு முதலீட்டியம் தமிழரின் சினிமாவுக்கான உட்கட்டமைப்புகள் அனைத்தையுமே மேலாதிக்கம் செய்யக்கூடிய நிலைமை மெள்ள உருவாகும். தயாரிப்பாளர், கலைஞர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், கேன்டீன் நடத்துபவர், காஸட் வெளியிடுபவர் என்று தொடர்ந்து பாட்டுப் புத்தகம் வி¢ற்பவர், தட்ட முறுக்கு விற்பவர் உள்ளிட்ட யாவரையும் பேதமின்றி உண்டு செரிக்கப்போகிறது ஹாலிவுட். ஹாலிவுட்டை, பன்னாட்டு முதலீட்டியத்தைத் தமிழ் நிலத்தில் போரிட்டு வீழ்த்த வேண்டுமாயின் தமிழரின் அமைப்பே அதைச் செய்ய முடியும். தென்னிந்திய அமைப்பல்ல.
துணைக்கண்ட அளவில் உலகமயம் உற்பவித்த நெருக்கடிகளை முதலில் சந்திக்கிற தேசிய சினிமா, தமிழரின் சினிமாவே. அதற்கான வரலாற்றுக் காரணிகள் ஆழத்தில் கிடக்கின்றன. உலகமயம் உருவாக்கிய நெருக்கடியே இன்றைய ஸ்ட்ரைக். தமிழரின் சினிமாவில் உற்பத்தி முறை மாற்றமுற்றிருக்கிறது. உகந்த உற்பத்தி முறையைக் கோரி நிற்கிறது துறை. உற்பத்தி முறை மாற்றமுற்றதால் சந்தை குலைந்திருக்கிறது. சந்தையும் தனது மறுவடிவம் தேடுகிறது. ஏனெனில், சந்தை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு உற்பத்தி முறை விதிகளை நிலைப்படுத்துமாறு அழுத்தத்தை ஏவுகிறது சந்தை. புதிய விதிகளுக்கு ஏற்ப தென்னிந்திய அமைப்பு மாற்றங்கொள்ளாது என்பதாலேயே பழைய அமைப்பைத் துறந்து புதிய அமைப்பைக் கோருகிறது தொழில்துறை.
இதுவொரு நவீனச் சிக்கல். கூட்டுத் தேசிய கூட்டுச் சந்தை சினிமாக் கட்டமைப்பு இச்சிக்கலைத் தீர்ப்பதற்கு மனமொப்பாது. தேசிய சந்தை, தேசிய சினிமாக் கட்டமைப்பு கொண்டுதான் இச்சிக்கலைத் தீர்க்கவியலும். இதன் பெயர் மொழிவெறி அல்ல. தமது வரலாற்று நிலத்தின் மீதான ஹாலிவுட்டின் படையெடுப்பை மறித்து நின்று தேசிய சினிமாவின் உயிர் காப்பதற்கான போர்முறை இது. இதிலெங்கே வந்தன மொழிவெறியும், இனவெறியும்?
ஒவ்வொரு தேசிய இனமும் - தெலுங்கரும், கன்னடியரும், மலையாளியரும் தத்தம் வரலாற்று நிலங்களில் ஹாலிவுட்டின் படையெடுப்பை மறிக்க வேண்டும். இத்தகு போர் முறைகளால்தான் துணைக் கண்டத்தின் தேசிய சினிமாக்களை மரணத்திலிருந்து காக்க முடியும். பிற தேசிய சினிமாக்கள் மீதும் அக்கறை கொண்டு முன்வைக்கப்படுகிற, கோட்பாட்டு அடிப்படைகள் கொண்ட பார்வை இது. இத்தகு பார்வை எப்படி மொழிவெறியாகும் அல்லது இனவெறியாகும்? தேசியத் தொழில்துறை ஒன்றின் நவீனச் சிக்கலைத் தீர்ப்பதற்கான இந்த நடைமுறையில் பிற இனத்தவர் போலத் தமிழரும் தங்களுக்கென்றோர் அமைப்பை நிறுவிக் கொள்வதில் மானுடகுலப் பகைக் கூறுகள் எதுவுமில்லை. தமிழரின் அமைப்பை மறுப்பதுதான் மானுடகுல விரோதப் பார்வை. தமிழ் முதலாளிகளைக் காப்பாற்றாமல் தமிழரின் சினிமாவைக் காப்பாற்றிவிட முடியாது. தமிழ் சினிமா முதலாளிகளைக் காக்க வேண்டுமாயின் தமிழரின் சினிமாவுக்கான அமைப்பு தேவை. ஹாலிவுட் படங்கள் டப்பாவதை விதிகளியற்றித் தடுக்கலாம். இப்போதே தடுக்காவிடில் எப்போதும் தடுக்கவியலாது. காலாந்தாழ்த்தாமல் தமிழரின் அமைப்பை ஆதரியுங்கள். முதலாளிகளின் அந்த அமைப்பு தொழிலாளர் விரோத அமைப்பாகத்தான் இருக்கும். அதற்குள் நின்று போராடி உரிமைகளை வெல்ல வேண்டும். FEFSI உயிரோடு இருக்கிற காலத்தில் மட்டும் முதலாளிமார் காரல் மார்க்ஸின் சீடர்களாக வலம் வருகிறார்களா? இல்லையே.
FEFSI என்கிற தென்னிந்திய அமைப்பைக் கொண்டு ஹாலிவுட்டுக்கு எதிரான சட்டங்களைத் தமிழர் நடைமுறைப்படுத்த இயலாது. இன்றைய நெருக்கடி தமிழரின் சினிமாவுக்கே உரியது. தெலுங்கு, கன்னட, மலையாள தேசிய சினிமாக்கள் இத்தகு நெருக்கடியில் இன்று இல்லை. எனவே தமிழரின் சட்டங்களைத் தென்னிந்திய FEFSI ஒருபோதும் ஏற்காது.”
மேற்படிப் பார்வையை ‘ஒருவர்’ முன்வைத்தார். தனது பார்வையை விரிந்த கோட்பாடு அடிப்படைகள் கொண்டு விளக்கிச் சென்றார். “மேற்படிப் பார்வையை அறிவியல் பூர்வமாக மறுப்பவர் தமது தர்க்கத்தை முன்வைக்கலாம்” என்றும் கேட்டுக் கொண்டார். எவரும் வாயே திறக்கவில்லை.
கிட்டத்தட்டப் பத்துமணிவாக்கில், நேரம் முடிந்து விட்டதென்று கல்யாண மண்டப ஊழியர் நெருக்கியதால் விவாதம் முடிவுற்றது. தேநீர்க் கடையில் அனைவருடனும் கடைசித் தேநீரைப் பருகிய பின்னரும் சற்று நேரம் பேசிவிட்டு லெனின் விடை பெற்றார். பின்னர் சிலர் கலைய, உணர்ச்சிப் பெருக்கு கொண்ட சிறு குழு கடை வாயிலில் கால் மாற்றி நின்றபடி உரையாடலைத் தொடர்ந்தது.
அன்றைய நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணி நோக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மார்க்ஸியப் பொதுவுடைமைக் கட்சி (C.P.I-M) தனது C.I.T.U. தொழிற்சங்கத்தைத் திரைப்படத் தொழிலிலும் விஸ்தரிப்பதற்கான தந்திரோபாயமாக இது இருக்கலாம் என்பதை யாரும் மறுக்கவில்லை.
ஈழத்தில் மூன்றாம் கட்ட ஈழப் போருக்கான முன்னெடுப்புகள் முனைப்பு கொண்டிருந்த காலம். ஈழ விடுதலையை வறட்டுத்தனமாக எதிர்க்கிற மார்க்ஸியப் பொதுவுடைமைக் கட்சி (C.P.I-M), படைப்பாளிகள் சங்கத்தை மட்டும் ஆதரித்து விடுமா என்ன? என்ற கேள்வி எழுந்தது. "சந்திரிகாவே குடுத்தாலும் இவன் தடுப்பான்" என்றார் ‘ஒருவர்’. தேநீர்க் கடைக்காரர், அனைவரையும் நகரச் சொல்லி, கதவைச் சார்த்திவிட்டு விளக்கணைத்துப் போனார். தேநீர் கிடைக்காததால் கலைந்தது அந்த உணர்ச்சிக் கூட்டம். கலையும்போது அந்த ‘ஒருவர்’ சொன்னார்: "சினிமாவுல மத்த மொழிக்காரனைப் போலத் தனக்குன்னு ஒரு அமைப்பைத் தமிழன் உருவாக்கறதுக்கே இத்தனை எதிர்ப்புகளையும், சதிகளையும் சந்திக்க வேண்டியுள்ளதே ... தனக்குன்னு ஒரு நாடு கேட்டால்? பிரபாகரனைத் தீர்த்துக் கட்டுவதற்கு என்னென்ன அநீதிகளும், சதிகளும் அரங்கேறும் என்பதை யோசித்துப் பாருங்கள்!" யோசித்தபடியே அனைவரும் கலைந்து சென்றனர்.
கட்டுரையாளர், வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் கதாசிரியர்.
தொடர்புக்கு: thangamdirector@gmail.com